தமிழின விடுதலைக்காய் இறுதி வரை களமாடி தங்கள் இன்னுயிர்களை அர்ப்பணித்த வீரமறவர்களில் உறுப்படுத்தப்பட்ட ஒரு தொகுதி மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு அவுஸ்ரேலியா, சுவிற்சர்லாந்து, பிரித்தானியா, பிரான்சு, கனடா ஆகிய நாடுகளில் 19.09.2026 சனிக்கிழமை நடைபெற்றது.

அவ்வகையில் தமிழ்த் தேசிய கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் மேற்கு அவுஸ்ரேலியாவில் இவ் வீரவணக்க நிகழ்வு மாலை 6.00 மணிக்கு ஆரம்பமாகியது. தொடக்கமாக பொதுச்சுடரை திரு. அலங்கேஸ்வரன் அருந்தவராஜா ஏற்றிவைத்தார்.

அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலிய தேசியக் கொடி திரு. சாந்தகுமார் பாலிப்போடி அவர்களாலும், அவுஸ்திரேலிய பூர்வீகக் கொடி திரு. சிவசாந்தன் பரராசசிங்கம் அவர்களாலும், தமிழீழத் தேசியக் கொடி திரு. கோகுலசேகரம் தனசேகரம் அவர்களாலும் ஏற்றிவைக்கப்பட்டது.

நிகழ்வின் முக்கிய அங்கமாக, தமிழீழ மாவீரர் பணிமனையால் உறுதிப்படுத்தப்பட்ட 20 மாவீரர்களின் திருவுருவப் படங்கள் தமிழீழ மண்ணில் மாவீரர் துயிலும் இல்லங்களில் பின்பற்றப்பட்ட நடைமுறையை ஒத்த வகையில், பண்ணிசை முழங்க அணிவகுத்து எடுத்துவரப்பட, தமிழீழத் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் இறக்கி வைக்கப்பட்டு பின்னர் துயிலும் இல்ல இசையுடன் திருவுருவப் படங்கள் அரங்கிற்குள் எடுத்துச் செல்லப்பட்டது.

தொடர்ந்து ஈகைச்சுடரை கடற்கரும்புலி லெப்டினட் கேணல் அன்பு அவர்களின் தாயார் திருமதி ஜெயதேவி நாகேஸ்வரா ஏற்றிவைத்தார்.

அதனைத் தொடர்ந்து மாவீரர்களுக்கான பொதுப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்க நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் திருவுருவப்படங்களுக்கு மலர்வணக்கம் செலுத்தினர்.

தொடர்ந்து தாயக விடுதலைப் போரில் உயிர்நீத்தவர்களையும், மாமனிதர்கள், நாட்டுப்பற்றாளர்கள் மற்றும் இலங்கை, இந்தியப் படைகளால் கொல்லப்பட்ட பொதுமக்களையும் நினைவுகூர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அகவணக்கத்தைத் தொடர்ந்து மாவீரர் பெயர் அறிவிப்பு இடம்பெற்றது. மாவீரர் பெயர் விபரங்கள் திரு. விமலாதித்தன் நடராஜா அவர்களால் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து மாவீரர்களாக அறிவிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் காணொளிகள் ஒளிபரப்பப்பட்டன.

தொடர்ந்து திரு வாசன் முருகசோதி அவர்களால் உறுதியுரை வாசிக்கப்பட்டது. நிகழ்வின் இறுதியில் தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு வீரவணக்க நிகழ்வு இனிதே நிறைவடைந்தது. திருமதி வளர்மதி ரவி அவர்களால் இவ் வீரவணக்க நிகழ்வு சிறப்பான முறையில் தொகுத்து வழங்கப்பட்டது.

Leave a Reply

Trending