தமிழின விடுதலைக்காக தம்மையே ஆகுதியாக்கிய மாவீரர்களை நினைந்துருகும் தமிழீழ மாவீரர் நாள் பேர்த் மேற்கு அவுஸ்ரேலியாவில் சிறப்புற நடைபெற்றது. 27.11.2026 வெள்ளிக்கிழமை மாலை மணி 06.05க்கு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.

நிகழ்வில் முதலாவதாக தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டன. அவுஸ்ரேலிய தேசியக் கொடியினை திரு ரவி அற்புதம் அவர்களும் அவுஸ்ரேலிய பூர்வீக மக்கள் கொடியினை திரு வித்தியாகரன் வால்மேகம் அவர்களும் ஏற்றியதை தொடர்ந்து தமிழீழத் தேசியக் கொடியினை திரு கதிர் அவர்கள் ஏற்றிவைத்தார்.

நிகழ்வில் 2008ம் ஆண்டு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் ஆற்றிய மாவீரர் நாள் உரையில் இருந்து சில பகுதிகள் ஒலிபரப்பப்பட்டது. அவ் உரையினைத் தொடர்ந்து நினைவெலி எழுப்பப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. தாயக விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கிய தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் உட்பட்ட மாவீரர்களுக்கும் தாயகப் போரின்பால் கொல்லப்பட்ட பொதுமக்களுக்குமாக அகவணக்கம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து துயிலும் இல்லப் பாடல் ஒலிக்கப்பட அனைத்து மாவீரர்களுக்குமான பொது ஈகைச்சுடரினை நாட்டுப்பற்றாளர் அருந்தவச்செல்வம் அவர்களின் துணைவியாரும் மேஜர் திசையரசி அவர்களின் சகோதரியுமான திருமதி அருந்தவச்செல்வம் அம்பிகாவதி அவர்கள் ஏற்றிவைக்க, சம நேரத்தில் தமிழீழத் தேசியத் தலைவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருமான மேதகு வே பிரபாகரன் அவர்களுக்கான ஈகைச்சுடரும் மற்றும் மாவீரர்களுக்கான ஈகைச்சுடரும் பெற்றோர்கள் உரித்துடையவர்கள் ஏற்றிவைக்கப்பட்டது.

தொடர்ந்து மலர்வணக்கப்பாடல் ஒலிக்க நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் தம் நேசித்த தமிழீழத் தேசியத் தலைவர் மற்றும் மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு நிரையாக சென்று மலர்வணக்கம் செலுத்தினர்.

நிகழ்வில் செல்வி யதுர்சிகா ரகுநாதன் அவர்களின் மாவீரர்களுக்கான வணக்க நடனமும் அதனைத் தொடர்ந்து இளைய தலைமுறையினர் சார்பாக செல்வி பவீனா கிருபாகரன் மற்றும் சஞ்சய் சிவசாந்தன் அவர்களின் சிறப்புரைகள் இடம்பெற்றன. தொடர்ந்து செல்வி சுபிட்ஷா சிறிபிரபாகரன் அவர்ளின் மாவீரர்களுக்கான கவிதையும் பாடப்பட்டது.

இன்றைய மாவீரர்நாள் சிறப்புரை தமிழ்த் தேசியக் கலைபண்பாட்டுப் பேரவையின் தலைவர் திரு அமுதன் நாகேஸ்வரா அவர்களால் வாசிக்கப்பட்டது. இன்றைய உலக ஒழுங்கு மற்றும் தமிழ்த் தேசிய போராட்டத்தை அழிக்கும் நோக்கில் அரசும் அரச ஒத்தோடிகளும் மேற்கொள்ளும் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிரல்களை தோற்கடித்து மாவீரர்களின் தியாகங்களும் தமிழீழத் தேசியத் தலைவரின் எண்ணங்களையும் சுமந்து எவ்வித சமரசங்களுக்கும் இடம் கொடாமல் எமது இலட்சியத்தை நோக்கி தமிழினம் ஒன்றுபட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

நிகழ்வின் இறுதியில் மாவீரர்களின் இலட்சியக் கனவுகளைச் சுமந்து தாய் மண்ணின் விடிவிற்காய் இறுதிவரை பயணிப்போம் என்ற உறுதியுரையுடன் தேசியக் கொடிகள் இறக்கப்பட்டன. இன்றைய மாவீரர் நாள் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் திரு வைகுந்தவாசன் முருகசோதி.

மாவீரர் நாளில் தமிழ்த் தேசியக் கலைபண்பாட்டுப் பேரவையின் வெளியீட்டுப் பிரிவினால் 2027 ஆண்டுக்கான தமிழீழத் தேசிய நாட்காட்டிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Trending