தமிழின அழிப்பின் உச்சக்கட்டமாக 2009 மே மாத இறுதியில் சிறிலங்கா அரசினால் நடாத்தப்பட்ட மாபெரும் மனிதப் பேரவலமான முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பை, தமிழின வரலாற்றில் சிறிலங்கா அரசால் நிகழ்த்தப்பட்ட தமிழின அழிப்புகளின் பொது நினைவேந்தல் அடையாளமாக தமிழர்கள் தாயகத்திலும், புலத்திலுமாக தமிழர் பரந்து வாழும் அனைத்து தேசங்களிலும் ஆண்டு தோறும் மே மாதம் 18 திகதி அன்று கடைப்பிடித்து வருகின்றனர்.

அவ்வகையில் தமிழர் இனவழிப்பு நினைவேந்தல் நாள் நிகழ்வுகள் மேற்கு அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரிலும் நடைபெற்றுள்ளது. 18-05-2026 திங்கட்கிழமை மாலை 06.00 மணிக்கு Maddington Community Centre மண்டபத்தில் நடந்த நிகழ்வில் மக்கள் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைந்துருகி தமது அகவணக்கத்தை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் பொதுச்சுடரினை, திரு ராஜன் வடிவேல்        அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து, அவுஸ்திரேலிய தேசியக்கொடியை திரு கிருபாகரன் பாலசுந்தரம் அவர்கள் ஏற்றிவைக்க, அவுஸ்திரேலிய பழங்குடி மக்களின் கொடியை தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் திரு. வினோத் நடராசா அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக்கொடியினை திரு. வித்தியாகரன் வால்மேகம் அவர்கள் ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து ஈகைச்சுடரினை, திருமதி விஜயகுமாரி செல்வரட்ணம் அவர்கள் ஏற்ற, சமநேரத்தில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைந்து நிகழ்வில் கலந்துகொண்ட உறவுகள் நினைவுச் சுடர்களை ஏந்தினார்கள்.

தொடர்ந்து தாயக விடுதலைப்போரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களுக்கும் பொதுமக்களுக்குமாக அகவணக்கம் செலுத்தப்பட்டு, முள்ளிவாய்க்கால் பாடல் ஒலிக்க அனைவரும் வரிசையாக சென்று இனவழிப்பின் சாட்சியாக அமைக்கப்பட்ட பொதுவணக்க பீடத்திற்கு மலர் வணக்கம் செலுத்தினார்கள். 

முதல் நிகழ்வாக தமிழர் இனவழிப்பு நாள் நினைவுகளை சுமந்த கவிதையினை செல்வி யதுர்சிகா ரகுநாதன் அவர்கள் வழங்கினார். தொடந்து இளையோர் சார்பாக செல்வன் அஜய் வைகுந்தவாசன்  அவர்கள் சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து செல்வி சுபிட்சா சிறிபிரபாகரன் அவர்களின் கவிதை இடம்பெற்றது.

தமிழர் இனவழிப்பு நாள் நிகழ்வின் சிறப்புரையை திரு சுதன் மயில்வாகனம் அவர்கள் வழங்கினார். நிகழ்வில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் குறியீடுகளில் ஒன்றான முள்ளிவாய்க்கால் கஞ்சி நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் வழங்கப்பட்டது.

நிறைவாக தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு தமிழர் இனவழிப்பு நினைவுநாள் நிகழ்வுகள் அனைத்தும் நிறைவுக்கு வந்தன. இந் நாள் நிகழ்ச்சிகள் அனைத்தையும் சிறப்புற தொகுத்து வழங்கியவர் திருமதி சுகந்தா சிறிபிரபாகரன்.

Leave a comment

Trending