நான்காம் ஈழப்போரின் இறுதிச் சமரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளரும் முதுபெரும் தளபதியுமான திருபொட்டு அம்மான் மற்றும் அனைத்துலக பொறுப்பாளர் கஸ்ரோ(மணிவண்ணன்) உட்பட ஒரு தொகுதி மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வு அவுஸ்ரேலியா, சுவிற்சர்லாந்து, பிரித்தானியா, பிரான்சு, கனடா ஆகிய நாடுகளில் 02.05.2026 சனிக்கிழமை நடைபெற்றது.

பேர்த் மேற்கு அவுஸ்ரேலியாவில் (Thornlie Park Center) இவ் வீரவணக்க நிகழ்வு மாலை 3:45 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமானது. பொதுச்சுடரினை திரு செந்துாரன் அவர்கள் ஏற்றிவைக்க தொடர்ந்து கொடிப் பாடல்கள் ஒலிக்கப்பட தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டன. அவுஸ்ரேலிய தேசியக் கொடியினை திரு றமணன் அவர்களும் அவுஸ்ரேலிய பூர்வீக மக்கள் கொடியினை திருமதி கில்டா சஞ்ஜீவ்குமார் அவர்களும் தொடர்ந்து தமிழீழத் தேசியக் கொடியினை திரு கார்த்திக் அவர்கள் ஏற்றிவைத்தனர்.

தொடர்ந்து தமிழினத்தின் விடிவிற்காக இறுதிவரை, தீரமுடன் போராடி முள்ளிவாய்க்கால் மண்ணில் வீரகாவியமான இம் மாவீரர்களுக்காக தமிழீழ தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டு மாவீரர்களின் பொது திருவுருவப்படம் தாங்கிய பேழை பிரதான மண்டபத்தினுள் எடுத்து செல்லப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாவீரர்களுக்கான ஈகைச்சுடரை மாவீரர்களான கப்டன் மருது கப்டன் அருணன் ஆகியோரின் தாயார் திருமதி சிதம்பரம் நடராசா அவர்களால் ஏற்றிவைக்கப்பட துயிலுமில்ல பாடல் ஒலிக்கப்பட்டது. தொடர்ந்து பொது திருவுருவப் படத்திற்கான மலர்மாலையை மாவீரரான வீரவேங்கை அக்பர் அவர்களின் சகோதரன் திரு புஸ்பகுமார் அவர்கள் அணிவிக்க தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டவர்களால் மாவீரர்களின் திருவுருவப் படங்களுக்கு மலர்வணக்கம் தொடர்ந்து அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

வீரவணக்க நிகழ்வில் இம் மாவீரர்களின் மாண்பை போற்றும் வகையில் தமிழீழ போராட்ட வாழ்வில் அவர்கள் ஆற்றிய பணிகள், சாதனைகள் அடங்கிய நினைவுக்குறிப்புகள் வாசிக்கப்பட்டது. நினைவுக் குறிப்புரைகள் திரு. கார்த்திக் விக்னேஸ்வரன், திருமதி ஜனனி சிவமைந்தன், திரு வாசன் முருகசோதி, திரு றமணன் கனகரட்ணம் மற்றும் திரு விமலாதித்தன் நடராசா ஆகியோரால் வாசிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து உறுதியேற்புடன் வீரவணக்க நிகழ்ச்சிகள் நிறைவுக்கு வந்தன. இந் வீரவணக்க நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் திரு. வாசன் முருகசோதி அவர்கள்.

இந் நிகழ்வில் தமிழின விடுதலைக்காக பல களங்களில், பல துறைகளில் சாதனைகளை புரிந்து முள்ளிவாய்க்கால் களத்தில் தமது இறுதி மூச்சு வரை போரிட்டு வீரவரலாறாகிய மாவீரர்களில் தமிழீழ மாவீரர் பணிமனையால் உறுதிப்படுத்தப்பட்ட இருபத்திநான்கு மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

Leave a comment

Trending