தி. கிட்டு வின் சல்லியர்கள் திரைப்படம் பேர்த் மாநகரில் அரங்கம் நிறைந்த காட்சியாக திரையிடப்பட்டது.

01.01.2026 அன்று வெளியிடப்பட்ட சல்லியர்கள் திரைப்படம் அவுஸ்ரேலியாவிற்கான வெளியீட்டு உரிமம் தமிழ்த் தேசிய கலைபண்பாட்டுப் பேரவையிடம் வழங்கப்பட்டு முதல் காட்சியாக 31/01/2026 அன்று பேர்த் மேற்கு அவுஸ்ரேலியாவில் திரையிடப்பட்டு பெரு வரவேற்பை பெற்றது.

அனைவரின் ஏகோபித்த ஆதரவுடன் ஏனைய மாநிலங்களிலும் திரையிடுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சல்லியர்கள் விரைவில் திரைகாணவுள்ளது.

எமது கதைகளை களமாக கொண்ட திரைப்படங்களை பெருவெற்றியடையச் செய்து அத் திரைப்படத் துறை சார்ந்தோர் வரலாற்று படைப்புக்களில் தொடர்ந்து செயலாற்ற ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும் எமது அமைப்பின் தேசியம் சார் செயற்பாடுகளில் ஒன்றாக வரலாற்று படைப்புகளை திரையிடல் இருந்து வருகிறது.

அவ்வாறான ஒரு முயற்சிக்கு ஒத்துழைப்பு நல்கி தமது வரலாற்றுக் கடமையை பேர்த் வாழ் தமிழ் சமூகம் சிறப்புற ஆற்றி உள்ளது. ஒவ்வொருவரின் சிறு பங்களிப்பான இவ் ஆதரவுத்தளம் வரலாற்றை படைக்க முயற்சிக்கும் திரைத்துறையினருக்கு பெரும் உந்துசக்தியாக அமையும்.

சல்லியர்கள் திரையிடலுக்கு அயராதுழைத்த மற்றும் வருகைதந்து சிறப்பித்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

நிர்வாகம்
தமிழ்த் தேசிய கலைபண்பாட்டுப் பேரவை

அனைவரின் ஒத்துழைப்பிற்கும் மிக்க நன்றி

திரைவிமர்சனம்

சல்லியர்கள் – வரலாற்றின் வேதனையையும் வீரத்தையும் மீண்டும் உயிர்ப்பிக்கும் ஒரு முக்கிய படைப்பு.

சல்லியர்கள் திரைப்படம், அறுபது ஆண்டுகளாக பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற பிறகு நீதி, சமத்துவம் மற்றும் தன்னாட்சி ஆகியவற்றிற்காக போராடிய தமிழ் சமூகத்தின் வேதனையான ஆனால் வீரமான வரலாற்றை மீண்டும் பதிவு செய்யும் மற்றொரு முக்கிய மைல்கல்லாக திகழ்கிறது.

படத்தின் பின்னணி இசை ஒவ்வொரு காட்சியின் திருப்பங்களுக்கும், பதட்டத்துக்கும், உணர்ச்சிக்கும் அழகாக ஒத்திசைந்துள்ளது. இசை, கதையின் ஆழத்தையும், கதாபாத்திரங்களின் மனநிலையையும் பார்வையாளர்களுக்கு நேரடியாக உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.

நந்தினியின் பாத்திரத்தையும் நடிப்பையும் இந்தப் படத்தின் இதயமாகவே சொல்லலாம். நூற்றுக்கணக்கான இளம் தமிழர்கள் அனுபவித்த ஒடுக்குமுறைகளையும், தாங்க முடியாத துயரங்களையும், குடும்பங்களை இழந்த வேதனையையும், வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சூழ்நிலையையும், அநீதி நிறைந்த அமைப்புக்கு எதிராகத் தங்களைத் தாங்களே காத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தையும் அவர் மிக நம்பகமாகப் பிரதிபலித்துள்ளார். அவரது கதாபாத்திரம் ஒரு நபரின் கதையல்ல — ஒரு தலைமுறையின் குரல்.

படத்தின் பல காட்சிகள், இதே போன்ற அனுபவங்களை எதிர்கொண்டவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் வலிமை கொண்டவை. அதே நேரத்தில், இன்றைய தலைமுறைக்கு தங்கள் முன்னோர்கள் செய்த தியாகங்களை அறியவும், அவர்கள் இன்று பல நாடுகளில் அனுபவிக்கும் சுதந்திரமும் வாய்ப்புகளும் எவ்வளவு விலையுயர்ந்தவை என்பதைப் புரிந்துகொள்ளவும் இந்தப் படம் ஒரு முக்கியமான கருவியாகத் திகழ்கிறது.

கிட்டு மற்றும் அவரது குழுவிற்கு மனமார்ந்த பாராட்டுகள். இப்படியான பயணம் தொடர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு படத்தை முடித்தவுடன் மனதில் தானாகவே எழுவது தவிர்க்க முடியாத ஒரு உணர்வாகும்.

நிலக்‌ஷன். சு

Leave a comment

Trending