தமிழர் மரபை மாதமாக தைமாதம் திகழ்கின்றது. உலக மாந்தருக்கு உணவளிக்கும் உழவரை போற்றி அனைத்திற்கும் மூலமான சூரியனுக்கு நன்றி செலுத்தும் நாளாகவும் தைத்திருநாள் அமைகின்றது. தைமாதம் தமிழர் மாண்பை போற்றும் திருவள்ளுவர் ஆண்டின் தொடக்கமாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்தேசிய கலைபண்பாட்டுப் பேரவை வருடாந்தம் நிகழ்த்தும் தமிழர் பெருவிழா தைத்திருநாள் பேர்த்தில் 24/01/2026 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

24/01/2026 சனிக்கிழமை மாலை 2.30 மணிக்கு Rossiter Pavilion, 16 Tuberose rd, Piara Waters WA 6112 வில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. மங்கல விளக்கினை மேற்கு அவுஸ்ரேலிய தமிழ்ச் சங்கம் சார்பாக அமர்நாத் புஸ்பராஜ் அவர்களும் தமிழ் மற்றும் பண்பாட்டுப் பயிலகம் சார்பாக திரு பாஸ்கரன் வெள்ளைச் சாமி அவர்களும் பேர்த் தமிழ் மகளீர் அமைப்பு சார்பாக திருமதி கீதா ஜீவன் அவர்களும் தொடர்ந்து திருமதி புவனேஸ்வரி வால்மேகம் அவர்களும் ஏற்றி வைத்து நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.

தொடர்ந்து தேசியக் கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டன. அவுஸ்ரேலிய தேசியக் கொடியினை, மேற்கு அவுஸ்ரேலிய தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு. சேதுராமன் முத்தையா அவர்கள் ஏற்றி வைக்க தொடர்ந்து அவுஸ்ரேலிய பூர்வகுடி மக்களின் கொடியினை  தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் திரு சுதாகர் விஜயகுமார் அவர்கள் ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து தமிழீழ தேசியக் கொடியினை  தமிழ்த் தேசிய கலை பண்பாட்டுப் பேரவை உறுப்பினர் திரு ரகுநாதன்  அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து தமிழீழ மண்மீட்பு போரில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கும் மக்களுக்குமாக அகவணக்கம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து சிறுவர்களால் தமிழ்மொழி வாழ்த்து பாடப்பட்டது. அடுத்து பொங்கல் நிகழ்ச்சியினை திரு திருமதி அருணன், யசிக்கா அருணன் மங்கல விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். வைகுந்தவாசன் முருகசோதி அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. தமிழர் பெருவிழா ஆரம்ப நிகழ்ச்சிகளை செல்வி ஜதுர்சிகா ரகுநாதன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

தொடர்ந்து சிறுவர் சிறுமியருக்கான விளையாட்டுக்கள் இடம்பெற்றன. குறிப்பாக சிறியோர் பெரியோர்களுக்கான பாரம்பரிய விளையாட்டுக்களில் கிளித்தட்டு, கயிறு இழுத்தல், முட்டி உடைத்தல், சங்கீதக்கதிரை, வினோத உடை முதலியன இடம்பெற்றன.

மாலை 7:30 மணியளவில் விளையாட்டுக்களில் வெற்றியீட்டியோருக்கான பரிசளிப்பு நடைபெற்றது. பரிசில்களை அனுசரணையாளர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் வழங்கி வைத்தனர்.

நிகழ்வில் 2026 ஆண்டு தமிழர் பெருவிழா அனுசரணையாளர்களுக்கு தமிழ்த் தேசிய கலைபண்பாட்டு பேரவை நிர்வாகத்தால் நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. தொடர்ந்து திரு றமணன் அவர்களால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டதை தொடர்ந்து தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு நிகழ்சிகள் யாவும் இனிதே நிறைவுக்கு வந்தன.

தமிழர் பெருவிழா விளையாட்டு நிகழ்ச்சிகளை திரு. விமலாதித்தன் நடராஜா மற்றும் வைகுந்தவாசன் முருகசோதி ஆகியோர் வர்ணனையுடன் தொகுத்து வழங்கினர்.

Leave a comment

Trending