இந்திய வல்லாதிக்க சதியால் வங்க கடலில் காவியமான தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் நினைவு நாளை முன்னிட்டு வருடந்தோறும் தமிழ் தேசிய கலை பண்பாட்டுப் பேரவை விளையாட்டுப் போட்டிகளை நடாத்தி வருகின்றது.

அவ்வகையில் 2026ம் ஆண்டு வங்கக்கடலில் காவியமான வேங்கைகளின் 33 வது ஆண்டு நினைவு நாள் 16.01.2026 அன்று ஆகும். இன் நினைவுநாளை முன்னிட்டு 11.01.2026 ஞாயிற்றுக்கிழமை பேர்த் மேற்கு அவுஸ்ரேலியாவில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

காலை 8:30 மணிக்கு ஆரம்பமான நிகழ்வில் ஈகைச்சுடரினை தளபதி கேணல் கிட்டு அவர்களின் துணைவியார் மருத்துவர் சிந்தியா அவர்கள் கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களது திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடரினை ஏற்றி வைத்தார். தொடர்ந்து தாயக விடுதலைப் போரில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கும் பொதுமக்களுக்குமான அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருவுருவப்படத்திற்கான மலர்களை வைத்து மலர் வணக்கத்தை மருத்துவர் சிந்தியா ஆரம்பித்து வைக்க நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் உணர்வுபூர்வமாக மலர்வணக்கம் செலுத்தினர்.

சிறியோர் பெரியோருக்கான கால்பந்து, மட்டைப்பந்து மற்றும் பெரியோருக்கான கரப்பந்து போட்டிகள் நடைபெற்றன. வங்கக்கடலில் காவியமான வேங்கைகளது நினைவுகளை தாங்கிய பல அணிகள் விளையாட்டுக்களில் பங்குபற்றின. விளையாட்டுக்களை கண்டுகளித்தோர் அணிகளுக்கான கரகோரசங்களை வழங்கி வீரர்களை உட்சாகப்படுத்த பலசுற்றுக்களின் இறுதியில் வெற்றிவாகை சூடிய அணிகளுக்கான கேடையங்களும் பதங்கங்களும் நிகழ்வில் வழங்கப்பட்டன.

இறுதியாக இடம்பெற்ற கரப்பந்து போட்டிகளுடன் வங்கக்கடல் நாயகர்களின் 33வது ஆண்டு நிகழ்வுகள் யாவும் மாலை 7.00 மணியளவில் மிகச் சிறப்பாக நிறைவுக்கு வந்தன.

Leave a comment

Trending