வணக்கம்,
எமது அன்புக்குரிய உறவுகளே! காலங்கள் கடந்தாலும் எமது உயிரை பிழிந்து உருக்கும் தமிழீழத் தேசியத் தலைமையின் இல்லாமை பற்றிய கருத்துக்களை கதைப்பதிலோ பகிர்வதிலோ தெளிவுறுத்துவதிலோ
தமிழினம் இதுவரை ஒரு மௌனத்தையே கடைப்பிடித்து வந்துள்ளது. அவர் இல்லாமை என்பதின் கனதியை மனம் ஏற்க மறுப்பதை வார்த்தைகளால் விபரிக்க முடியவில்லை. கடந்த பதினாறு வருடங்களாக எமது இனம்
தேசியத்தலைமை பற்றிய ஏக்க எண்ண ஓட்டங்களிலேயே தமக்கு தாமே சமாதானம் கூறி வார்த்தைகளை கடத்த முடியாமல் விம்மி வெடிக்கிறது.

இறைவன் என்றும் தலைவன் என்றும் அருவுருவம் கடந்த பொருளென்றும் வணங்கியும், வருவாரென்று ஏங்கித்தவித்தும், நாம் படும் அங்கலாய்ப்பை எமது எதிர்கால சமுதாயம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
வரலாறுகளை தேடி தெளிவுபெற துடிக்கும் எமது இளைய சமுதாயத்திடம் வெறும் ஐதீகங்களை விட்டுச் செல்வது முறையுமல்ல. நாம் வாழும் காலத்தில் நிகழ்ந்தவற்றை வரலாறாக்கி செல்வதே எமக்கும் எம் சந்ததிகளுக்கும் வலுவை சேர்க்கும்.

காரணங்களை கூறி பதினாறு ஆண்டுகளை கடத்திவிட்டோம்;. தன் இனத்திற்காக வரிந்துகொண்ட இலட்சியத்தில் எவ்வித சமரசங்களுக்கும் இடம் கொடாமல் இறுதி மணித்துளிவரை போரிட்டு எமக்காக எம் இனத்திற்காக தன்னை ஈகம் செய்த அந்த வரலாற்றோனை தமிழின வரலாற்றில் மேன்மை படுத்துவதே சிறந்தது.

எமது மனங்களை இறுக்கமடையச் செய்யும் அவரது நினைவுகள் காலம் காலமாக எம்முள் வாழ்ந்து எம்மையும் எம் சந்ததிகளையும் வழிநடத்தும்.

உலகமே போற்றும் உன்னத தலைவனை வணங்குவோம் வாரீர்!
தம்பியாய் அண்ணனாய் தந்தையாய் தலைவனாய் யாதுமாகி நின்ற
மேன்மைக்கு எம் கடன் செய்ய வாரீர்!
இலட்சிய வேட்கையை நெஞ்சில் சுமந்து அவ் அக்கினிப் பிளம்பிற்கோர்
தீபத்தை ஏற்றிடுவோம் திரண்டு வாரீர்!
மென்மையில் மேன்மையான எம் தலைவனுக்கு மலர்தூவி
அகம் வணங்க அணியணியாய் வாரீர்…..

எதிர்வரும் ஆகஸ்ட் 02 அன்று தமிழீழ நெறிமுறைகளுக்கு அமைவாக எமது தேசியத் தலைவருக்கான வீரவணக்க நிகழ்வு பேர்த்தில் இடம் பெறும். அவருக்கான அம் மரியாதையை தொடர்ந்து, வரும் காலங்களில் தான் நேசித்த மாவீர வரலாற்று அத்தியாயத்தில் இணைந்து எம்மை வழிநடத்தும் சூரிய தேவனுக்கு
காலத்தின் ஆணை ஏற்று கடமை செய்வோம்.

நாள் : 02.08.2025 சனிக்கிழமை மாலை மணி 5.00
இடம் : Wandarra Hall. 42 Edgeware St Lynwood WA 6147

நிர்வாகம்
தமிழ்த் தேசிய கலை பண்பாட்டுப் பேரவை
0400 204 581 / 0469 823 269

‘’தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’’

Leave a comment

Trending