கடலின் மடியில் குழுமத்தின் உருவாக்கத்தில் ‘கடலில் கரைந்துவிட்ட காலங்களும் வரலாற்றில் தடம் பதித்த நினைவுகளும்’ பாகம் 01 உலகளவிய ரீதியில் 01.03.2026 அன்று வெளியீடு செய்யப்பட்டது.

பேர்த் மேற்கு அவுஸ்ரேலியாவில் 01.03.2026 அன்று மாலை 6.00 மணிக்கு இந்நூல் வெளியீட்டு நிகழ்வு ஆரம்பமாகியது. நிகழ்வில் பொதுச் சுடரினை தமிழியற் செம்மல் சித்தம் அழகியான் இராசரத்தினம் அவர்கள் ஏற்றிவைக்க ஈகைச்சுடரினை கப்டன் மருது மற்றும் கப்டன் அருணன் ஆகியோரின் தாயார் திருமதி சிதம்பரம் நடராசா அவர்கள் ஏற்றி மலர்வணக்கம் செய்தார்.

தொடர்ந்து தமிழீழப் போராட்டத்தில் வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கும் மற்றும் போராட்டத்தில் சாவடைந்த பொதுமக்களுக்குமாக அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வரவேற்பு நடனத்தை செல்வி ஜதுர்சிகா ரகுநாதன் வழங்கிச் செல்ல திரு விமலாதித்தன் நடராசா வரவேற்புரை ஆற்றினார். தொடர்ந்து புத்தக அறிமுகமும் வரலாற்று ஆவணங்களின் தேவை தொடர்பாக  திரு.சதீஸ் கதிர் அவர்கள் உரையாற்றினார்.

தொடர்ந்து புத்தகக் கண்ணோட்டம் திருமதி ஜனனி சிவமைந்தன் அவர்களும் கருத்துரைகளை திரு புஸ்பகுமார் அருணாச்சலம், திரு அமுதகாசன் நாகேஸ்வரா, திரு கோபிநாத் தில்லைநாதன் ஆகியோர் வழங்கியிருந்தனர்.

தொடர்ந்து நுால் ஏற்புரையை காணொளி வாயிலாக திரு செல்வக்குமார் வழங்க சிறப்புரையை பேரவைத் தலைவர் திரு கதிர் வழங்கியிருந்தார்.

நுால் தொடர்பான கருத்துரைகளை தொடர்ந்து நுால் வெளியீடு இடம் பெற்றது. ‘கடலில் கரைந்துவிட்ட காலங்களும் வரலாற்றில் தடம் பதித்த நினைவுகளும்’ நுாலினை சிறப்பு விருந்தினர் தமிழியற் செம்மல் சித்தம் அழகியான்    இராசரத்தினம் வெளியிட்டு வைக்க நுாலின் முதற் பிரதியினை கப்டன் மருது மற்றும் கப்டன் அருணன் ஆகியரின் தந்தை திரு.நடராஜா நல்லதம்பி அவர்கள் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து நுாலின் சிறப்பு பிரதிகளை வழங்கப்பட்டன.

தொடர்ந்து சிறப்பு விருந்தினர் தமிழியற் செம்மல் சித்தம் அழகியான்    இராசரத்தினம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து நன்றியுரையினை திரு வாசன் முருகசோதி அவர்கள் வழங்க நிகழ்ச்சிகள் யாவும் மாலை 8.00 மணியளவில் சிறப்புற நிறைவுக்கு வந்தன. இன்றைய நுால் வெளியீட்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் திரு விமலாதித்தன் நடராசா அவர்கள்.

Leave a comment

Trending