அவுஸ்ரேலியாவில் முதன்முறையாக மாவீரர்நாளில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் பேர்த் மேற்கு அவுஸ்ரேலியாவில் தமிழ் தேசிய கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில், 27/11/2025 வியாழக்கிழமை மாலை 6:05 மணிக்கு, கானிங்டன் (Cannington) சிவிக் பூங்காவில் (Civic Park) மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.


நிகழ்வின்போது, தமிழீழ விடுதலைக்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்கள் அனைவருக்கும் மக்கள் திரண்டு ஈகைச் சுடர் ஏற்றி, அகவணக்கம் செலுத்தினர். இதன் ஒரு பகுதியாக, வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கும் ஈகைச்சுடர் ஏற்றி, மேற்கு அவுஸ்திரேலியத் தமிழ்ச் சமூகம் தமது வீரவணக்கத்தை ஒருமித்த குரலில் வெளிப்படுத்திள்ளது.


கடந்த 10.03.2025 அன்று தமிழீழ மாவீரர் பணிமனையால் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வீரச்சாவு அறிவித்தல் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 02.08.2025 அன்று தமிழீழத் தேசியத் தலைவருக்கான வீரவணக்க நிகழ்வு நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தமிழீழத் தாயக விடுதலைக்கு வித்தாகிப்போன ஆயிரமாயிரம் மாவீரர்களின் உன்னத தியாகங்களை நினைவுகூரும் புனித நாளான மாவீரர் நாளில், தமிழீழத் தேசியத்தலைவரின் திருவுருவப் படமும் மற்றும் இறுதிச் சமரில் தேசியத் தலைவருடன் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களுக்குமான பொது திருவுருவப் படமும் வைத்து வீரவணக்கம் செலுத்தும் வகையில் இம் மாவீரர்நாள் அமைந்தது.

அவுஸ்ரேலிய தேசிய கீதம் ஒலிக்க அவுஸ்ரேலிய தேசிய கொடியினை திரு.சதீஸ் கதிர் அவர்களும். தொடர்ந்து அவுஸ்ரேலிய   பூர்வீக திருமதி சுகந்தா சிறிபிரபாகரன் அவர்களும் ஏற்றி வைத்தனர். தொடர்ந்து தமிழீழக் தேசியக் கொடிப்பாடல் ஒலிக்க தமிழீழத்  தேசியக் கொடியினை மேஜர் அறச்செல்வி அவர்களின் சகோதரர் திரு.குமார் அவர்கள் ஏற்றி வைத்தார்.

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 2008 ஆம் ஆண்டு ஆற்றிய மாவீரர்நாள் உரையிலிருந்து சில பகுதிகளை ஒலித்ததை தொடர்ந்து நினைவொலி எழுப்பப்பட்டு தாயக விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிர்களை ஆகுதியாக்கி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களுக்கும் அப் போரின்பால் கொல்லப்பட்ட பொதுமக்களுக்குமாக அகவணக்கம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து முதன்மைச் சுடரினை கப்டன் புலிவேந்தன் மற்றும் வீரவேங்கை நிசாந்தன் ஆகியோரின் சிறிய தாயார் திருமதி மேரிமாசில்லா பீற்றர் பெர்னான்டோ அவர்கள் ஏற்றி வைக்க சம நேரத்தில் தமிழீழத் தேசியத் தலைவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவருமான மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கான ஈகைச்சுடரையும் மாவீரர்களின் பெற்றோர் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் மாவீரர்களுக்கான ஈகைச்சுடர்களையும் ஏற்றிவைக்க துயிலும் இல்ல பாடல் ஒலிக்கப்பட்டது . அதனைத் தொடர்ந்து மலர்வணக்க பாடலுடன் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்வணக்கத்தை செலுத்தினர்.

முதலாவதாக மாவீரர்களுக்காக வணக்க நடனம் இடம்பெற்றது நடனத்தை செல்வி யதுர்சிகா ரகுநாதன் அவர்கள் வழங்கினார்.

தொடர்ந்து வல்வை அகலினியனின் உருவாக்கத்தில் தமிழீழ எழுச்சி இசையாளன் முகிலரசனின் இசையில் சைந்தவி, கோவை கமலா, பிரசான், அனிஷ்கா, முத்துச்சிற்பி, அமல்யா, சத்தியப்பிரகாஷ், யுவராஜ், பார்த்தீபன், டினுஜா, இதயதூரிகா, சாந்தி , பார்த்தீபன், கரோலின், முகிலரசன் ஆகியோர் பாடிய பாடல்கள் அடங்கிய அறம் கண்ட மாவீரம் இசைப்பேழையை பேரவையின் வெளியீட்டுப் பிரிவின் சார்பாக திரு கோகுலன் அவர்கள் வெளியீட்டு வைக்க அறம் கண்ட மாவீரம் இசைப் பேழையை திரு அருள்  நிரோஜன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.                                                   

தொடர்ந்து செல்வி அதினா தயாளன் அவர்கள் மாவீரர் கவி பாடிச் சென்றார். அதனைத் தொடர்ந்து இளையோர் சார்பாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரையை செல்வி அபர்ணா அவர்கள் வழங்கினார் தொடர்ந்து செல்வி யதுர்சிகா அவர்களின் நெறியாழ்கையில் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே பாடலுக்கு செல்வன் அஷ்வின் செல்வன் ஜொய்சன் செல்வன் யெனுசன் செல்வன் சஞ்சய் செல்வன் அகன் செல்வி சன்யா ஆகியோர் எழுச்சி நடனம் வழங்கினார்கள்

தொடர்ந்து திரு. றமணன் அவர்கள் சிறப்புரையாற்றினார் உரையில் ‘பேரவை நிர்வாகம் வரலாற்றை சரியான முறையில் அடுத்த சந்ததிக்கு கடத்தும் பணியின் தொடர்ச்சியாக இம் மாவீரர்நாள் அமைந்தது என்றும், பேரவையின் தன்னலமற்ற பணிகளுக்கு ஒத்துழைப்பை வழங்கிவரும் பொதுமக்களுக்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டது.

மாவீரர்களின் இலட்சியக் கனவுகளைச் சுமந்து தாய் மண்ணின் விடிவிற்காய் இறுதிவரை பயணிப்போம் என்று உறுதி எடுத்துக்கொண்டு தேசியக் கொடிகள் இறக்கப்பட்டு மாவீரர் நாள் நிகழ்வுகள் அனைத்தும் நிறைவுக்கு வந்தன.


இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் பெருமளவில் மக்கள் கலந்துகொண்டு தமது உணர்வை வெளிப்படுத்தி இருந்தனர். குறிப்பாக மக்கள் பல வருடங்களாக தமிழீழத் தேசியத் தலைவருக்கு தமது கடமையை செய்ய வேண்டும் என்ற ஆன்மார்த்தமான வேண்டுகை நிறைவேறிய மனநிறைவை பெற்றதாகவும் இவ் ஏற்பாட்டை செய்து தந்த பேரவை நிர்வாகத்திற்கு தமது நன்றியையும் தெரிவித்திருந்தனர்.

இன்றைய மாவீரர் நாளில் தமிழ்த் தேசிய கலைபண்பாட்டுப் பேரவையின் வெளியீட்டுப் பிரிவினரால் அவுஸ்ரேலியாவில் வெளியிடப்பட்ட ‘அறம் கண்ட மாவீரம்‘ ஒலிப் பேழையையும். மற்றும் பேரவையின் வெளியீட்டுப் பிரிவினரால் வெளியிடப்பட்ட தமிழீழத் தேசிய நாட்காட்டியும் மக்கள் பெற்றுச் சென்றனர்.

Leave a comment

Trending