இது மாவீரர்களை தொழுதெழும் புனித மாதம் எமது விடுதலைக்கு உரமாகி எம் உணர்வோடு கலந்துவிட்ட அந்த அற்புதமானவர்களை ஈன்றெடுத்த எம் தேச பெற்றோர்களை வரலாற்று கடமையில் அவர்களின் தியாகத்தையும் நினைந்து போற்றும் புனித மாதம். அந்தவகையில் மேற்கு அவுஸ்ரேலியாவில் வாழ்ந்துவரும் தமிழீழ மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோருக்கான மதிப்பளிப்பு நிகழ்வு 15/11/2025 அன்று நடைபெற்றது.
தமிழ்த் தேசிய கலைபண்பாட்டுப் பேரவையால் ஒழுங்குபடுத்தப்பட்ட இந்நிகழ்வு Canning Town Hallல் நண்பகல் 12:30 மணிக்கு ஆரம்பமானது.
நிகழ்வில் பொதுச்சுடரினை மாவீரர் வீரமைந்தன் அவர்களின் சகோதரன் திரு சிவசாந்தன் பரராசசிங்கம் ஏற்றிவைக்க தொடர்ந்து ஈகைச்சுடரினை மாவீரர் சுபாஸ் அவர்களின் சகோதரி ஏற்றி வைத்தார். தொடர்ந்து தாயகவிடுதலைப் போரில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கும் பொதுதக்களுக்குமான அகவணக்கம் செலுத்தப்பட்டது.
மாவீரர்பொதுப் படத்திற்கான மலர்மாலையை மாவீரர் மேஜர் அறச்செல்வியின் சகோதரர் திரு. குமார் அவர்கள் அணிவித்து மலர்வணக்கத்தை ஆரம்பித்துவைக்க நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் வரிசையாக வந்து மலர்வணக்கம் செலுத்தினர்.
தொடர்ந்து மாவீரர் நினைவுரைகள் இடம்பெற்றன. மாவீரர்கள் பற்றி அறியாத அவர்களின் தியாகத்தின் சில பக்கங்களையும் அவர்களுடன் பழகிய அனுபவங்களும் மிகவும் உணர்வுபூர்வமாக பகிரப்பட்டன.
தொடர்ந்து தமிழ்த் தேசிய கலைபண்பாட்டுப் பேரவையில் கொள்கை உரை நிர்வாகத்தின் செயலாளர் திரு வைகுந்தவாசன் முருகசோதி அவர்களால் வாசிக்கப்பட்டது. அதில் பேரவை நிர்வாகம் மிக நேர்த்தியாகவும் நேர்மையாகவும் மாவீரர்களை மனதில் இருத்தி வரும் இடையூறுகளை எதிர்கொண்டு தமது பணிகளை அர்ப்பணிப்புடன் தொடர்ந்து முன்னெடுக்கும் என்று கூறப்பட்டது.
தொடர்ந்து மாவீரர்களின் நினைவுப் சின்னம் பேரவை நிர்வாகத்தினரால் மாவீரர் பெற்றோர் உரித்துடையோருக்கு வழங்கப்பட்டு நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கான மதிய உணவும் வழங்கப்பட்டது.
நிகழ்வின் நன்றியுரையினை திரு றமணன் கனகரத்தினம் அவர்கள் வழங்கினார். மதிப்பளிப்பு நிகழ்வு இனிதே நிறைவடைந்ததை தொடர்ந்து மாவீரர் புகழ்பாடும் கார்த்திகைச் சாரல் இசை நிகழ்ச்சி மாலை 2.00 மணிக்கு ஆரம்பமானது.
கார்த்திகைச் சாரல் இசை நிகழ்ச்சியில் தாயகப் பாடல்களை பேர்த் வாழ் தாயக கலைஞர்கள் பாடினார்கள். இளம் சிறார்கள் பங்கு பற்றி தமது தாயகப்பாடல்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கார்த்திகைச் சாரல் இசை நிகழ்ச்சியின் முடிவில் பாடகர்களுக்கான நினைவுப் பரிசு பேரவை நிர்வாகத்தினரால் வழங்கப்பட்டு நிகழ்வுகள் யாவும் மாலை 6:00மணிக்கு இனிதே நிறைவுக்கு வந்தன.














































































































Leave a comment