தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தடைநீக்கிகள் கரும்புலிகள். இந்நுாற்றாண்டின் மாபெரும் சாதனைகளை நிகழ்த்தி தமிழின விடிவிற்கு வித்தாகிய தமிழீழத்தின் முதல் தற்கொடைப் போராளியான கப்டன் மில்லர் 1987 யூலை 5ம் நாள் சிறிலங்கா பேரினவாத அரசுக்கும், அதன் இராணுவத்திற்கும் எதிராக, நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த இராணுவ முகாமின் மீது தற்கொடைத் தாக்குதலை நடத்திய நாளாகும். இந்நாளே இக் கரு ம்பு லி மாவீரர்களை நினைந்துருகும் நாளாக யூலை 05 வருடந்தோறும் தமிழர்களால் கடைப்பிடிப்படுகிறது.

இவர்களின் வீரமும், தியாகமும் இன்றும் ஒவ்வொரு ஈழத் தமிழர்களிடமும் உலகத் தமிழர்களிடமும் உள்ளிருந்து இயங்கும் பெரும் விடுதலை சக்தியாக செயற்படுகிறது என்றால் அது மிகையாகாது. இந்நாள் எம்மை விழுங்கக் காத்திருந்த விசப் பூதங்களை எல்லாம் அகற்றி எமது விடுதலைப் பாதையினைச் செப்பனிட்டுத் தந்தவர்களுக்கான நாள்.

வரலாற்றில் தமக்கென தன்னிகரற்ற இடத்தை நிரப்பிய சாதனையாளர்களை நினைவுகூரும் கரும்பு லிகள் நாள் 05-07-2025 அன்று சனிக்கிழமை மாலை 6.00மணிக்கு பேர்த் மேற்கு அவுஸ்ரேலியாவில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மக்கள் இம் மானமாவீரர்களுக்கான பொது நினைவிடத்தில் தமது மலர்வணக்கத்தையும் அகவணக்கத்தையும் செலுத்தினர்.

நிகழ்வில் தமிழ் தேசிய செயற்பாட்டாளர் விமலாதித்தன் அவர்களின் சிறப்புரை இடம்பெற்றது. வரலாற்றில் நிகழ்ந்த சில அற்புத சரித்திரங்களை தனது உரையில் வெளிப்படுத்தி இந்நாளின் மகத்துவத்தினை போற்றியதுடன், தாயகத்தில் தற்போது பேசுபொருளாகிய செம்மணிப் புதைகுழி மற்றும் இனவழிப்புக்கான நீதி வேண்டிய முன்னெடுப்புக்களை புலம்பெயர் தேசத்தில் ஒற்றுமையுடன் முன்னெடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தினையும் இவ்வுரையில் எடுத்துரைக்கப்பட்டது.

நிகழ்வின் இறுதியில் அனைவரின் ஒத்துழைப்புடனும் வேண்டுகோளுடனும் தமிழ்த் தேசிய கலைபண்பாட்டுப் பேரவையினால் பேர்த்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் தமிழீழத் தேசியத் தலைவருக்கான வீரவணக்க நிகழ்வு ஒழுங்கமைப்பு தொடர்பான கலந்துரையாடலில் அனைவரும் கலந்து தமது கருத்துக்களை பகிர்ந்து நிகழ்வு ஏற்பாட்டில் தமது ஒழுங்கமைப்பு பொறுப்புக்களை முன்வந்து ஏற்றதுடன் இந்நாள் நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.

Leave a comment

Trending