தமிழீழ விடுதலைப் போராட்டம் தனது உச்ச நிலையை அடைந்திருந்த வேளை உலக வல்லாத்திக்க சக்திகளின் துணைகொண்டு அப் போராட்டத்தை சிங்கள தேசம் அழித்தது. உரிமை கோரும் இனத்தை முழுவதுமாக அல்லது பகுதியாக அழிப்பதன் மூலம் தனது மேலான்மையை நிறுவி தமிழீழ கோரிக்கையை நிர்மூலமாக்கலாம் என்ற எண்ணத்தில் இலட்சக்கணக்கான தமிழர்களை ஈவிரக்கமின்றி சிங்கள பேரினவாதம் கொன்றழித்தது. போரின் உச்சத்தில் சரணடைந்த மக்களையும் போராளிகளையும் அம்மண்ணிலே கொன்று புதைத்த சிங்கள தேசம் அதை வெற்றியாக கொண்டாடியது.
இந் நிலையில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின்பால் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூர்ந்து உலகம் முழுவதும் அம்மக்களுக்கான நினைவேந்தல் இடம் பெற்று வருகின்றது. அவ்வகையில் தமிழர் இனவழிப்பு நினைவேந்தல் நாள் நிகழ்வுகள் மேற்கு அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரிலும் நடைபெற்றுள்ளது. 18-05-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 06.00 மணிக்கு Maddington Community Centre மண்டபத்தில் நடந்த நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டிருந்தனர். முள்ளிவாய்க்கால் மண்ணில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைந்துருகி தமது அகவணக்கத்தை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் பொதுச்சுடரினை, திருமதி துர்க்கா சிற்பரன் அவர்கள் ஏற்றினார். தொடர்ந்து, அவுஸ்திரேலிய தேசியக்கொடியை திருமதி வளர்மதி ரவி அவர்கள் ஏற்றிவைக்க, அவுஸ்திரேலிய பழங்குடிமக்களின் கொடியை தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் திரு.தனுசன் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக்கொடியை திரு.அருணன் அப்புத்துரை அவர்கள் ஏற்றிவைத்தார்.
ஈகைச்சுடரினை, திருமதி தீபா அவர்கள் ஏற்ற சமநேரத்தில், முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைந்து ஏனையோரும் நினைவுச் சுடர்களை ஏந்தினார்கள்.
தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு, முள்ளிவாய்க்கால் பாடல் ஒலிக்க அனைவரும் வரிசையாக சென்று இனவழிப்பின் சாட்சியாக அமைக்கப்பட்ட பொதுவணக்க பீடத்திற்கு மலர் வணக்கம் செலுத்தினார்கள்.
முதல் நிகழ்வாக “முள்ளிவாய்க்கால் மண்ணே வணக்கம்….” என்ற பாடலுக்கான வணக்க நடன நிகழ்வை செல்வி மதுப்பிரியா கிருபாகரன் வழங்கினர்.
தொடர்ந்து “நாம் கடந்து வந்த நாளல்ல இன்றுவரை நாம் கடந்துவிட முடியாமல் கனத்துக் கிடக்கும் நாள்….. என்னும் கவிதை இடம் பெற்றது. இக்கவியை செல்வி யதுர்சிகா ரகுநாதன் வழங்கினார்.
அடுத்ததாக, செல்வி சிவானியரசி கார்த்தி அவர்கள் வலி மிகுந்த மே மாதம் நினைவுரையை வழங்கினார்.
தொடர்ந்து இனவழிப்பு நாள் நிகழ்வின் சிறப்புரையை திரு. வித்தியாகரன் வால்மேகம் அவர்கள் வழங்கியதை தொடர்ந்து பேர்த் நகரில் இடம்பெற இருக்கும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு பற்றிய அறிவிப்பை திரு வாசன் முருகசோதி அவர்கள் வழங்கினார்.
நிறைவாக தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு இனவழிப்பு நினைவுநாள் இரவு 8.30 இற்கு நிறைவடைந்தது. இன்றைய நிகழ்ச்சிகளை அனைத்தையும் சிறப்புற தொகுத்து வழங்கியவர் செல்வி வனு வசந்தன்.
இந்நிகழ்ச்சியில், முள்ளிவாய்க்கால் கஞ்சியின் முக்கியத்துவத்தை அதன் வலியையும் உறுதியையும் இளையோர் புரிந்துகொள்ளும் படி உரைத்து முள்ளிவாய்க்கால் கஞ்சி அனைவருக்கும் வழங்கப்பட்டது.
























































Leave a comment