கார்த்திகை 23 திகதி சனிக்கிழமை மாலை 12.00 மணிக்கு மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் மதிப்பளித்தல் நிகழ்ச்சி பேர்த் மேற்கு அவுஸ்ரேலியாவில் நடைபெற்றது. Wandarrah Hall, 42 Edgeware St Lynwood WA 6147 என்னும் முகவரியில் நடைபெற்ற மேற்படி மதிப்பளிப்பில் பேர்த்தில் வசித்துவரும் மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் வீரவேங்கை அக்பர் அவர்களின் சகோதரர் திரு புஸ்பகுமார் மாவீரர்களுக்கான ஈகைச்சுடரினை ஏற்றிவைக்க தொடர்ந்து அகவணக்கம் மலர்வணக்கம் என்பன இடம்பெற்றன. அவற்றைத் தொடர்ந்து மதிப்பளித்தலின் முக்கியத்துவம் தொடர்பாக திரு விமலாதித்தன் அவர்களால் கருத்துரை இடம்பெற்றது. தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெற்றோர்கள் மற்றும் உரித்துடையவர்களால் தமது மாவீரச் செல்வங்களில் நினைவுகளை சுமந்த நினைவுரைகள் இடம்பெற்றன.
தொடர்ந்து மதிய விருந்தும் அதனைதொடர்ந்து மாவீரர் பெற்றோர் உரித்துடையோர்களுக்கு அவர்களின் மாவீரச்செல்வங்களின் நினைவாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டு மதிப்பளிப்பு நிகழ்ச்சிகள் யாவும் மாலை 2.00 மணிக்கு நிறைவுக்கு வந்தன. மாவீரர் பெற்றோர், உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் திரு நடராஜா விமலாதித்தன் .
மதிப்பளிப்பு நிகழ்சியை தொடர்ந்து மாவீரர் புகழ்பாடுவோம் “கார்த்திகைச் சாரல் 2024” இசை நிகழ்ச்சி மாலை 2.00 மணிக்கு ஆரம்பமானது. பேர்த் வாழ் தாயக கலைஞர்கள் மாவீரர்களுக்கு தமது இசை வணக்கத்தை செலுத்தினார்கள். இன்நிகழ்ச்சியில் எமது அடுத்த தலைமுறையினர் தமது திறமைகளை மாவீரர்களுக்கு விருந்தாக்கி சென்றமை அனைவராலும் பாராட்டப்பட்டு பெரு வரவேற்பை பெற்றது.
திரு நிமலகரன் அவர்கள் கலைஞர்களை ஒருங்கிணைத்து நிகழ்ச்சி திறம்பட அமைய பெரும் பணியாற்றியிருந்தார். நிகழ்ச்சியில் பங்குபற்றிய அனைத்து பாடகர்களுக்கும் “தமிழ்த் தேசிய கலைபண்பாட்டுப் பேரவை’ நிர்வாகத்தினர் நினைவு பரிசில்களை வழங்கியிருந்தனர். இறுதியில் நன்றியுரையை திரு வித்தியாகரன் அவர்கள் வழங்கியதை தொடர்ந்து நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுக்கு வந்தன. இன்றைய “கார்த்திகைச்சாரல்” இசை நிகழ்ச்சியை திறம்பட தொகுத்து வழங்கியவர் திரு வைகுந்தவாசன்.































































Leave a comment