தமிழ்தேசிய கலைபண்பாட்டுப் பேரவை வருடாவருடம் நிகழ்த்தும் தமிழர் பெருவிழா தைத்திருநாள் பேர்த்தில் 27/01/2024 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. பெருவிழாவினை அவுஸ்ரேலிய தமிழர் பேரவை மற்றும் இலங்கை தமிழ் சங்கம் இணைந்தும் பேர்த் வர்த்தக நிறுவனங்களின் அனுசரணையுடனும் சிறப்புற நடைபெற்றது.
27/01/2024 சனிக்கிழமை மாலை 2.00 மணிக்கு Rossiter Pavilion, 16 Tuberose rd, Piara Waters WA 6112 வில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. நிகழ்ச்சிக்கு வருகைதந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் மங்கல விளக்கினை ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.
தொடர்ந்து தேசியக் கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டன. அவுஸ்ரேலிய தேசியக் கொடியினை, இலங்கை தமிழ்ச் சங்கம் சார்பாக திரு.ஐீவன் ஜெகநாதன் அவர்கள் ஏற்றி வைக்க தொடர்ந்து அவுஸ்ரேலிய பூர்வகுடி மக்களின் கொடியினை தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் திரு சபாநாதன் இளையதம்பி அவர்கள் ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து தமிழீழ தேசியக் கொடியினை தமிழ்த் தேசிய கலை பண்பாட்டுப் பேரவை உறுப்பினர் திரு கதிர் அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து தமிழீழ மண்மீட்பு போரில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கும் மக்களுக்குமாக அகவணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து தமிழ்மொழி வாழ்த்து பாடப்பட்டதை அடுத்து பொங்கல் நிகழ்ச்சியினை திருமதி பாமதி தனபாலசிங்கம் மற்றும் திருமதி யோகா தொடங்கி வைத்தார்கள். அதனை தொடர்ந்து திருமதி தர்சா ஜெயகஜன் அவர்களின் நெறியாள்கையில் செல்வி யதுர்சிகா ரகுநாதன் செல்வி தனஞ்ஜெயனி ஜெயகஜன் ஆகியோரின் வரவேற்பு நடனம் இடம்பெற்றது. தொடர்ந்து வித்தியாகரன் வால்மேகம் அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. தமிழர் பெருவிழா ஆரம்ப நிகழ்ச்சிகளை செல்வி மோனிகா இராஜசேகர் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
தமிழ்த்தேசிய கலை பண்பாட்டுப் பேரவையினால் வருடந்தோறும் வழங்கப்படும் “செயல்மாந்தர்” விருது இவ்வருடம் தமிழ்மொழி வளர்ச்சிக்கு அளப்பரிய பங்காற்றி புலம்பெயர் தேசங்களில் இளையோர் தமிழை இலகுவாக கற்கும் படிமுறைத்தமிழை ஆக்கி தந்த பேராசான் சித்தம் அழகியான் இராசரத்தினம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
திரு விமலாதித்தன் அவர்களால் செயல்மாந்தர் இராசரத்தினம் அவர்களைப் பற்றிய குறிப்புரை நிகழ்த்தப்பட்டதை தொடர்ந்து “செயல்மாந்தர்” விருதினை பேராசானுக்கு தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் இணைந்து வழங்கி மதிப்பளித்தனர்.
அதனை தொடர்ந்து கடந்த வருடம் உயர்தரப் பரீட்சையில் தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுத்து பரீட்சையில் பங்குகொண்ட மாணவர்களுக்கான “சிறப்பாற்றுகை” ஊக்குவிப்பு விருது வழங்கப்பட்டது. 2024ம் ஆண்டுக்கான இவ்விருதினை செல்வி தர்சிக்கா கயா, செல்வி ருத்ரபிரபன்யா வேங்கூர்பிரபாகர் மற்றும் செல்வி சூரிய ரூபா ரிஷிகாந்தன் ஆகியோர் பெற்றனர். விருதினை செயல்மாந்தர் இராசரத்தினம் அவர்கள் வழங்கி வைத்தார்.
தொடர்ந்து சிறுவர் சிறுமியருக்கான விளையாட்டுக்கள் இடம்பெற்றன. இளையோர் பெரியோர்களுக்கான பாரம்பரிய விளையாட்டுக்களில் கிளித்தட்டு, கயிறு இழுத்தல், முட்டி உடைத்தல், சங்கீதக்கதிரை முதலிய விளையாட்டுக்களும் இடம்பெற்றன.
மாலை 7:30 மணியளவில் விளையாட்டுக்களில் வெற்றியீட்டியோருக்கான பரிசளிப்பு மற்றும் நடந்து முடிந்த 2024 கேணல் கிட்டு வெற்றிக்கிண்ண போட்டிகளில் வென்ற அணிகள் மற்றும் சிறப்பாட்ட வீரர்களுக்கான கேடயங்களும் வழங்கப்பட்டன. பரிசில்களை அனுசரணையாளர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் வழங்கி வைத்தனர். அடுத்து திரு விமலாதித்தன் அவர்களால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டதை தொடர்ந்து தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு நிகழ்சிகள் யாவும் நிறைவுக்கு வந்தன.
தமிழர் பெருவிழா விளையாட்டு நிகழ்ச்சிகளை திரு. விமலாதித்தன் மற்றும் திரு. நிமலகரன் ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள். தமிழர் பெருவிழா தைப்பெங்கல் நிகழ்ச்சிக்கான இணை அனுசரணையை Kenwick Auto Repair, Yaal Cafe, MPY Auto Care, Ayyappan Jewellers, Propertynet Real Estate, New Divine Hair & Beauty, Taxellent Accountants, Kulfilicious Traditional Indian Ice Cream, NR Hair & Beauty Saloon, A-Infinity, EN ExyNet, Masala Town, MK Transport, Ananda Bhavan, ESS Lawn Moving and Gardening, KRB Saloon, The Curry Stand மற்றும் NNN Automart ஆகியோர் இணைந்து வழங்கியிருந்தனர்.

































































































Leave a comment