நாட்டுப்பற்றாளர் தனபாலசிங்கம் இராஜேஸ்வரன் அவர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்ச்சி மேற்கு அவுஸ்ரேலியா பேர்த்தில் Canning Town Hall எனும் மண்டபத்தில் 08/10/2022 சனிக்கிழமை நண்பகல் 12:15க்கு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. நிகழ்ச்சியை ஆரம்பிக்கும் முகமாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. பொதுச்சுடரினை திரு நரேந்திரன் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழ விடுதலைப்போரில் களமாடி வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கும் அதன்பால் கொல்லப்பட்ட பொதுமக்களுக்குமாக அகவணக்கம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து நாட்டுப்பற்றாளர் தனபாலசிங்கம் இராஜேஸ்வரன் அவர்களின் திருவுருவப்படத்திற்கான ஈகைச்சுடரை அவரது மனைவியார் திருமதி உமா இராஜேஸ்வரன் அவர்கள் ஏற்றிவைக்க திருவுருவப்படத்திற்கான மலர்மாலையை திரு சதீஸ் அவர்கள் அணிவித்தார். அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த அனைவரும் திருவுருவப்படத்திற்கு மலர்வணக்கம் செலுத்தினார்கள்.

நிகழ்ச்சியின் முதலாவதாக மறைந்த பேராசிரியர் தனபாலசிங்கம் இராஜேஸ்வரன் அவர்களின் தமிழ்த் தேசியச் செயற்பாடுகள், சமூக சேவைகள், தமிழின விடுதலைப் பற்றுறுதி என்பற்றிற்காக தமிழீழ விடுதலைப் புலிகளால் வழங்கப்பட்ட “நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு அறிக்கை வாசிக்கப்பட்டது. அறிக்கையினை திரு வால்மேகம் வித்தியாகரன் அவர்கள் வாசித்தார்.

நிகழ்ச்சியில் தொடர்ந்து நாட்டுப்பற்றாளர் தனபாலசிங்கம் இராஜேஸ்வரன் அவர்களின் நினைவுரைகள் இடம் பெற்றன. அவுஸ்ரேலிய தமிழர் பேரவை சார்பில் திரு சாகாயநேசன் சஞ்சிவ்குமார், தமிழின விடுதலைக்கு அரசியல் ரீதியாக முன்னெடுப்புக்களை மேற்கொள்ள அவர் அவுஸ்ரேலிய தமிழர் பேரவையினை உருவாக்கினார் என நினைவுரையாற்றிச் சென்றார்.

தொடர்ந்து பேர்த் தமிழர் மட்டைப்பந்தாட்ட அமைப்பின் சார்பாக திரு இராஜன் வடிவேல் அவர்கள், பேராசிரியர் தமது அமைப்பிற்கு செய்த உதவிகளையும் தமிழினத்தின் பால் அவர் கொண்டிருந்த ஈடுபாட்டினையும் குறிப்பிட்டு நினைவுரையாற்றினார்.

இலங்கை தமிழ்ச் சங்கம் சார்பாக உரையாற்றிய திரு சோமசுந்தரம் அவர்கள் தாயகத்தில் பேரசிரியரின் தந்தையாரின் அரசியல் ஈடுபாட்டையும், பெற்றோலியத் துறையில் அன்னார் ஆற்றிய பணியையும் தமிழினத்தின் மீது கொண்ட பற்றுறுதியையும் குறிப்பிட்டார்.

பேராசிரியர் தம்மை தாயகத்திலிருந்து அழைத்து வந்து தமக்கும் தம்மைப் போன்ற பல மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் ஆற்றிய பணிகள் தொடர்பாகவும் பேராசிரியரின் பன்முகப்படுத்தப்பட்ட ஆளுமை தொடர்பாகவும் பேராசிரியரின் மாணவர்கள் நினைவுரையாற்றி சென்றனர்.

நிகழ்வில் இணைய வழி இணைந்திருந்த ஏனைய மாநில மூத்த செயற்பாட்டாளர்கள் பேராசிரியருடன் இணைந்து பணியாற்றிய நினைவுகளை மீட்டனர். 05/05/2002 பொருண்மிய மதியுரையகத்தின் (TECH) அங்குரார்ப்பணம் மற்றும் பேராசிரியரின் ஆளுமை, அவரின் தலைமைப் பொறுப்பின் கீழ் பணியாற்றிய அனுபவங்களையும் தாயகத்தில் மேற்கொண்ட பணிகள், அவரின் திறமையான செயற்பாட்டுக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்த தமிழீழம் கிளிநொச்சியில் அமைந்த “அறிவியல் நகர்”. 2009 ஆயுத மௌனிப்பிற்கு பின்னர் அரசியல் ரீதியான நகர்வுகளை முன்னெடுக்க அவர் ஆரம்பித்த அவுஸ்ரேலிய தமிழர் பேரவை (ATC) என்பவை தொடர்பாக நினைவுரையாற்றியிருந்தார்கள்.

அவுஸ்ரேலிய அனைத்து மாநில தமிழ்த் தேசிய செயற்பாட்டு அமைப்புக்களின் கூட்டறிக்கையை திரு வைகுந்தவாசன் அவர்கள் வாசித்தார். அவ்வறிக்கையில் பேராசிரியர் தாயகத்தின் வடக்கு கிழக்கு பகுதிகளில் மேற்கொண்ட பணிகள் அவுஸ்ரேலிய அனைத்து மாநிலங்களிலும் மேற்கொண்ட பணிகள், புலம்பெயர்தேச பணிகள் தொடர்பான விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

நிகழ்ச்சியில் பேராசிரியரின் பன்முகப்படுத்தப்பட்ட ஆளுமை மற்றும் சேவைகள் தொடர்பாக பலரும் நினைவுரையாற்றினர். பேராசிரியருக்கு தனது கவியை வழங்கிச் சென்றார் பேர்த் மாநிலத்தின் மூத்த செயற்பாட்டாளர் திருமதி ரெஜினா சண்முகநாதன்.

நிகழ்ச்சியின் இறுதியில் நாட்டுப்பற்றாளர் தனபாலசிங்கம் இராஜேஸ்வரன் அவர்களின் திருவுருவப்படமும் தமிழீழத் தேசியக்கொடியும் திருமதி. உமா ராஜேஸ்வரன் அவர்களிடம் தமிழ்த் தேசிய கலைபண்பாட்டுப் பேரவையின் தலைவர் திரு. விமலாதித்தன் நடராஜா அவர்களால் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.

நன்றியுரையை அடுத்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டோருக்கான மதிய உணவு வழங்கி உபசரிக்கப்பட்டனர். திரு வாசன் அவர்கள் இந்நாள் நிகழ்ச்சிகளை தொகுத்துவழங்கினார்

நிகழ்வில் தமிழ்த் தேசிய செயற்பாடுகளில் பேராசிரியருடன் இணைந்து செயற்பட்ட மூத்த செயற்பாட்டாளர்கள், பேர்த் தமிழ் பொது அமைப்புக்களின் நிர்வாகிகள் மற்றும் பேராசிரியரின் மாணவர்கள் எனப் பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நாட்டுப்பற்றாளர் தனபாலசிங்கம் இராஜேஸ்வரன் அவர்களுக்கு தமது வீரவணக்கத்தையும் மரியாதையையும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Trending