தமிழீழ மக்களின் விடுதலைக்கான பணியில் உன்னதமாக பங்களித்த பெருமனிதனாக வாழ்ந்து மறைந்த நாட்டுப்பற்றாளர் பேராசிரியர் தனபாலசிங்கம் இராஜேஸ்வரன் அவர்களின் நினைவுகளோடு இணைந்திருக்கின்றோம்.
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் உயர் கல்விமானாக பெருந்தொழில் வல்லுநராக வாழ்ந்த அவர் தாயக மக்களின் விடுதலைப் போராட்டத்தின் பெரும் பங்காளியாகவும் உயர்ந்து நின்றார்.
ஸ்கொட்லாந்தில் பெற்றோலிய சார் பொறியில்துறையில் கலாநிதிப் பட்டப்படிப்பை நிறைவு செய்த அவர் பிரித்தானியாவில் முதுகலை வணிக மேலாண்மை கற்கைநெறியை நிறைவு செய்திருந்தார். அவுஸ்திரேலியாவின் மேற்கு அவுஸ்திரேலியா மாநிலத்தில் உள்ள கேட்டின் பல்கலைக்கழகத்தில் பொறியியல்துறை பேராசிரியராக இணைந்த அவர் அங்கு பெற்றோலிய பொறியியல்துறையில் முதுகலைமாணி பட்டப்படிப்பை அறிமுகப்படுத்தினார்.
அதன் பின்னர் மேற்கு அவுஸ்திரேலிய பெற்றோலிய ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராகவும் பணியாற்றியிருந்தார்.
தமிழர் தாயகத்தில் சவாலான போர்க்காலத்தில் பொருளாதாரத் தடை நெருக்கடியில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவோடு இணைந்து எமது மக்களுக்கு நிதி ரீதியாகவும் அறிவு ரீதியாகவும் மகத்தான பங்களிப்பை வழங்கியிருந்தார். தமிழீழத் தாயகம் சென்ற அவர் தமிழீழத் தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை நேரடியாக சந்தித்து தமிழீழத் தாயகத்தின் எதிர்கால பொருளாதார கட்டமைப்புகள் தொடர்பாக கலந்துரையாடி அன்றைய காலப்பகுதியில் கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் கட்டமைக்கப்பட்டுவந்த பல்கலைக்கழகத்தில் பொறியியல் பிரிவை உருவாக்குவதற்கான பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டிருந்தார்.
தமிழீழத் தாயகத்தில் சிறப்பான பணிகளை முன்னெடுத்துநின்ற தமிழீழ பொருண்மிய மதியுரையகத்தின் (The Economic Consulting House) அவுஸ்திரேலியா நாட்டுக்கான பணியை பொறுப்பெடுத்து தமிழீழ தாயக கட்டுமானத்திற்கான ஆதரவை ஒருங்கிணைத்திருந்தார். பொருண்மிய மதியுரையகம் ஊடாக நீண்ட காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பல அபிவிருத்தித் திட்டங்களை, புலம்பெயர் நாடுகளில் உள்ள தாயக துறைசார் நிபுணர்களை ஒன்றிணைத்து, தாயகத்திற்கு வரவழைத்து, யாழ்ப்பாண பல்கலைக்கழகம், மட்டக்களப்பு பல்கலைக்கழகம் மற்றும் பல்வேறு துறைசார் திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வந்தார்.
தாயகத்தில் கிளிநொச்சியில் இயங்கிய யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாயபீடத்துடன் இணைந்து வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான நீண்ட கால தற்சார்புப் பொருளாதார மேம்பாட்டுக்கான விவசாயம் கால்நடை வளர்ப்பு கைத்தொழில் துறை சார்ந்த கூட்டுப் பண்ணைகள் உருவாக்கும் திட்டங்களிலும் தாயகத்திற்காக பாரிய பங்களிப்பை
வழங்கி வந்தார். அதேவேளை தாயகத்தில் உள்ள இளைஞர்களை புலம்பெயர்ந்த நாடுகளுக்கு அழைத்துவந்து நவீன தொழிநுட்பங்களை கற்பிக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன் அதற்காக பலரை அத்தகைய வழிகளில்
வளர்த்தவராக அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்.
2009 இற்கு பின்னான காலத்தில் தமிழர் தரப்பு அரசியல் தொடர்ந்தும் பலம்பெற்று இருக்கவேண்டும் என்பதற்காக தமிழர்களின் அடிப்படை அரசியல் கோரிக்கைகளான தமிழர் தாயகம்இ தமிழர் தேசியம் தமிழர்களிற்கான சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தமிழருக்கான தீர்வு அமையவேண்டும் என்பதை தொடர்ந்தும் வலியுறுத்தும் வகையில்
அவுஸ்திரேலிய தமிழர் பேரவையை(ATC)
உருவாக்குவதில் பிரதான பங்களிப்பை அவர் வழங்கினார். பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தொடர்ந்தும் தமிழ்த்தேசியப் பயணத்தில் இணைந்து நின்ற அவரது பங்களிப்பு அனைவருக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது. பிரித்தானியா தொடக்கம் அவுஸ்திரேலிய பெருங்கண்டம் வரை அவரது கால்கள் அகலப் பரப்பி நின்றபோதும் வணிக ரீதியான உலகில் வானுயர வாய்ப்புகள் இருந்தபோதும் அவற்றை தாண்டிய விதத்தில் தாயகம் நோக்கிய அவரது பங்களிப்பு நீடித்து நின்றது.
இவரைப்போன்ற நாட்டுப்பற்றாளர்களின் கனவுகளை நனவாக்க தாயக மற்றும் புலம்பெயர் வாழ் துறைசார் வல்லுநர்கள் இணைந்து தாயக மக்களின் மேம்பாட்டுக்கான பணிகளை முன்னெடுக்க உழைக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம். உன்னத மனிதராக வாழ்ந்த ராஜ் இராஜேஸ்வரன் என்று அழைக்கப்பட்ட நாட்டுப்பற்றாளர் பேராசிரியர் தனபாலசிங்கம் இராஜேஸ்வரன் அவர்களின் இழப்பால் துயருறும் அவரது குடும்பத்தினர் உறவினர்கள் நண்பர்களோடு எமது கரங்களையும் இறுகப்பற்றிக் கொள்கின்றோம்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
தமிழ்த் தேசிய கலை பண்பாட்டுப் பேரவை- பேர்த்
தமிழ்த் தேசிய நிகழ்வுகள் ஒருங்கிணைப்புக்குழு – அடேலையிட்
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – அவுஸ்திரேலியா







Leave a comment