அமைதிப்படை என்ற போர்வையில் தமிழீழத்தில் அகலக்கால் பதித்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் தமிழினத்தையும் அழிக்கும் நோக்கோடு செயற்பட்ட இந்திய வல்லாதிக்க அரசிடம் ஐந்தம்ச கோரிக்கையை முன்வைத்து யாழ் நல்லூர் ஆலய முன்றலில் பன்னிருநாட்கள் நீராகாரம் இன்றி 26-09-1987ல் வீரச்சாவடைந்த தியாகதீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 35 ஆண்டு நினைவு நாள் மேற்கு அவுஸ்ரேலியா பேர்த்தில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது.

பேர்த் Thornlie Park Centre ல் 26-09-2022 திங்கட்கிழமை மாலை 6.00 மணிக்கு ஆரம்பமான நிகழ்வில் அவுஸ்ரேலிய தேசியக்கொடி, அவுஸ்திரேலியாவின் பழங்குடி மக்களின் தேசியக்கொடி என்பன ஏற்றப்பட்டதை தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

நிகழ்வில் தியாகதீபம் லெப் கேணல் திலீபன் மற்றும் 26-09-2001 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தில், சிறிலங்கா ஆழ ஊடுருவும் படையினரின் கிளைமோர்த் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மூத்த தளபதி கேணல் சங்கர் (முகிலன்), அண்மையில் பேர்த்தில் சாவடைந்த நாட்டுப்பற்றாளர் வைரமுத்து சண்முகநாதன் ஆகியோரின் திருவுருவப்படங்களுக்கு ஈகைச்சுடரேற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டது.

தொடர்ந்து தமிழீழ விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்கள் மற்றும் அதன்பால் கொல்லப்பட்ட தமிழ் உறவைகளை மனதில் நிறுத்தி அகவணக்கம் செலுத்தப்பட்டது. அடுத்து மூவரினது திருவுருவப்படங்களுக்கும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்த பொதுமக்கள் அனைவரும் உணர்வுபூர்வமாக மலர்வணக்கம் செலுத்தினார்கள்.

தியாகதீபம் லெப் கேணல் திலீபன் மற்றும் கேணல் சங்கர், நாட்டுப்பற்றாளர் வைரமுத்து சண்முகநாதன் ஆகியோரின் தியாகங்கள் அர்ப்பணிப்புக்களை குறிப்பிட்டு நிகழ்வு தொகுப்பாளர் தலைமையுரையாற்றினார்.

தொடர்ந்து சிறுவர் சிறுமியர் பங்குகொண்ட கவியரங்கம், கவிதைகள் மற்றும் தியாகதீபம் பற்றிய சிறப்புரைகளும் இடம்பெற்றன.

இறுதியாக தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு நிகழ்வுகள் நிறைவுபெற்றன.

Leave a comment

Trending