இறைஞ்சிக் கேட்பதல்ல..
போராடிப் பெறுவதே விடுதலை
தமிழர் மனங்களில் நிறைந்த ஒப்பற்ற தலைவர் மேதகு அவர்களின் வரலாற்றை தழுவிய மேதகு 2 திரைப்படம் (19/08/2022) உலகத் தமிழர் ஆதரவுடன் வெளிவருகின்றது.

ஐரோப்பிய நாடுகளில் 19,20 மற்றும் 21 ஆகிய திகதிகளில் திரையிடப்படும் இத் திரைப்படம் அவுஸ்ரேலியாவின் அனைத்து மாநிலங்களிலும் 20 மற்றும் 21 ஆகிய திகதிகளில் திரைகாண உள்ளது.
தமிழினத்தின் மாபெரும் தலைவரது வரலாற்றின் ஊடாக தமிழர்களின் நியாயமான போராட்டத்தை வெளிக்கொண்டுவரும் முகமாக தமிழீழ திரைக்களத்தினர் மேதகு திரைப்பட தொடரினை வெளியீடு செய்து வருகின்றனர்.

குறைந்த ஊதியத்திலும், ஊதியம் பெறாமலும் தமது பொன்னான நேரங்களை நடிகர்களும் ஏனைய பணியாளர்களும் இவ் வரலாற்றுப் பணியில் செலவிட்டுள்ளார்கள்.
பெரும் பொருளாதார நெருக்கடியில் இந்திய இலங்கை அரச இயந்திரங்களின் முட்டுக்கட்டைகளையும் தாண்டி தமிழர்களின் பேராதரவுடன் வெளிவரும் இத் திரைப்படம் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதே பேரவா.
இவ் வரலாற்று காவியத்திற்கு தமிழர்களாகிய நாம் கொடுக்கும் பேராதரவே புதிய பரிணாமத்தில் எமது உரிமை போராட்டத்தை உலகறியச் செய்யும் வழியாகும்.

இப் பேராதரவு இத்துறையில் ஈடுபடுவோருக்கு பெரும் உந்துதலாகவும், உறங்கிக் கொண்டிருக்கும் ஆயிரம் ஆயிரம் ஈழத்தமிழர் உரிமை சார் போராட்ட வரலாறுகளை வெளிக்கொணர உந்துசக்தியாகவும் அமையும்.
பல தடைகளை தாண்டி வெளிவரும் மேதகு2 திரைக்காவியத்திற்கு எமது ஆதரவினை வழங்குவதுடன் எமது உரிமைப் போராட்டத்தின் நியாயத்தன்மையை உலகறியச் செய்வோம்.
இத் திரைப்படம் அனைவரையும் சென்றடைவதே அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர்களுக்கும் உற்சாகத்தை அளிக்கும்.
மேதகு படக்குழுவினருக்கும் தமிழீழ திரைக்களத்தினருக்கும் எமது வாழ்த்துகளையும் வணக்கத்தையும் தெரிவிப்பதில் பெருமையடைகின்றோம்.
-தமிழ்த் தேசிய கலை பண்பாட்டுப் பேரவை- மேற்கு அவுஸ்ரேலியா













Leave a comment